"ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அப்ரூவர் ஆக வேண்டும்” - ராகுல் காந்தி பேச்சு
கடந்த சில மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டது முதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல், அத்துடன் "அனுமதியற்ற, சட்டவிரோத" நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குதல் வரை பல்வேறு விவகாரங்கள் இந்த ஆட்சேபனைகளில் அடங்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனையடுத்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை விமர்சித்து கருத்து தெரிவித்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.