நேரடித் தகவல் (Live Update)
கலை அமைப்பான 'ஜன் நாட்டிய மன்ச்', மாணவர் அமைப்பான 'இந்திய மாணவர் சங்கம்' (
#SFI) மற்றும் மாணவர் பண்பாட்டு அமைப்பான 'தஸ்தக்' ஆகியவை இணைந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, புது டெல்லியின் கன்னாட் பிளேஸில் இன்று மாலை 6:30 மணிக்கு ஒரு கலைநிகழ்ச்சியை நடத்தின.
நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே, காவல்துறை மாணவர்களைச் சூழ்ந்துகொண்டு பலமுறை மாணவர்கள் மீது, குறிப்பாக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மாணவிகள் ஒன்றிணைந்து நின்று, காவல்துறையின் வன்முறை முயற்சிகளை முறியடித்து, தொடர்ந்து தங்கள் பாடல்களைப் பாடினர்.
மாணவர்கள் தேசியக் கீதம் பாடி தங்களது நிகழ்ச்சியை நிறைவு செய்ய முற்பட்டபோது, காவல்துறை அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியுள்ளது. இந்த வன்முறை அரங்கேறிய வேளையில், அப்பகுதியில் கூடிய கும்பல் ஒன்று, "டெல்லி போலீஸ், தும் லத் பஜாவோ, ஹம் தும்ஹாரே சாத் ஹைன்"
"டெல்லி காவல்துறையே, தடியடி நடத்துங்கள்; நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று முழக்கமிடத் தொடங்கியது.
சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அக்கும்பலைச் சேர்ந்த சிலர், "ஆசாதி சாஹியே இன்கோ, ஏக்-ஆத் கோ ஹம் ஆசாதி தே ஹி தேங்கே" – "இவர்களுக்கு சுதந்திரம் வேண்டுமாம், இவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு நாங்களே சுதந்திரம் கொடுத்து விடுகிறோம்" என்று பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது.
எஸ்.எஃப்.ஐ அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சஜி மற்றும் எஸ்.எஃப்.ஐ மாநிலத் தலைவர் சூரஜ் எளமண் உட்பட 15 எஸ்.எஃப்.ஐ தோழர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. இதுவரை பெண் தோழர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.