விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் மீது எனக்கு எப்போதுமே பெரிய மதிப்பு இருந்ததில்லை. மனிதர்களின் பலவீனங்களையும் உணர்ச்சிகளையும் மையமாக வைத்து விளையாடப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே அதை நான் பார்த்திருக்கிறேன்.
இன்று எதிர்பாராத விதமாக தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட விமர்சகரும், விஜயின் தீவிர ஆதரவாளருமான பிரசாந்த் நின்றுகொண்டிருந்தார். நாம் தமிழர் கட்சியையும், அண்ணன் சீமானையும் கடுமையாக விமர்சித்து வந்த அவரை அங்கே பார்த்தது எனக்கு உண்மையில் ஒரு பரிதாபமான காட்சியாகவே தோன்றியது. அங்கேயும் சென்று விஜயை அவர் புரோமோட் செய்து கொண்டிருந்தார்.
“நம்மை இவ்வளவு விமர்சித்துக் கொண்டிருப்பவர் இங்கே என்ன பேசப்போகிறார்?” என்ற ஆர்வத்தில் நிகழ்ச்சியை கவனித்தேன்.
ஆச்சரியம் என்னவென்றால், அவருடன் போட்டியிட்ட மற்ற இருவரைக் காட்டிலும் பிரசாந்த் தெளிவாகவும் சிறப்பாகவும் பேசினார். ஆனால் இறுதியில் மக்கள் அவரை நிராகரித்து தோல்வியடையச் செய்து வெளியேற்றிவிட்டார்கள்.
இப்போது தோல்வி என்றால் என்ன? வெற்றி என்றால் என்ன? மக்கள் தேர்வு என்றால் என்ன? என்பதன் ஒரு சிறிய அனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஜனநாயகம் என்ற பெயரில் சிறந்தவை தோற்கடிக்கப்படுவதும், கவர்ச்சியானவை வெற்றிபெறுவதும் நமது சமூகத்தில் புதிதல்ல.
ஒரு அரசியல் அமைப்பின் கொள்கை, கோட்பாடு, எதிர்கால ஆட்சிக்கான பார்வை ஆகியவற்றைக் காட்டிலும், யார் அதிகம் தோற்ற கவர்ச்சி என்பதையே மக்கள் தேர்வு செய்யும் நிலை உருவாகிவிட்டது. ‘ஆட்சி வரைவு 2026’ போன்ற விரிவான ஆவணத்தை முன்வைத்து, சிறந்த தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆட்சிக்கான மாற்றுப் பார்வையையும் முன்வைத்து நாம் தமிழர் கட்சி மக்களிடம் தோல்வியடைந்த அனுபவமும் இதையே உணர்த்துகிறது.
அதனால்தான், பிரசாந்த் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் .
கருத்தை எதிர்கொள்ளாமல், எதிரில் இருப்பவரின் அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளாமல், எதிர் கருத்தை வைக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு அண்ணன் சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் அவர் விமர்சிக்கும் பாங்கு மிக மோசமானது.
கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்த இவர், விஜய் அரசியலுக்கு வந்தவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பது உண்மையான அரசியல் மதிப்பீட்டைக் காட்டிலும் சினிமா ரசிகத்தனத்தின் தாக்கமாகவே எனக்கு தோன்றுகிறது.
பிரசாந்த், இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தோல்வி ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லியிருக்கலாம்.
கருத்தில் சிறந்தவராக இருந்தீர்கள் என்றாலும், மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. உங்களுடன் போட்டியிட்டவர்கள் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் உங்களைவிட முன்னிலையில் இருந்தார்கள்.அவர்கள் தான் வென்றார்கள்.
இதுதான் அரசியலிலும் நடக்கிறது.
மக்கள் எப்போதும் சிறந்த கொள்கையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறை அரசியல் பல நேரங்களில் வேறு உண்மையைச் சொல்லுகிறது.
எது கவர்ச்சியாக இருக்கிறதோ, எது எளிதில் ஈர்க்கிறதோ, எது அதிகம் பேசப்படுகிறதோ அதற்கே மக்கள் அதிகமாகச் செல்வாக்கு அளிக்கிறார்கள்.
அதை உங்கள் இன்றைய தோல்வி உங்களுக்கே மிக நெருக்கமாக உணர்த்தியிருக்கும்.
எனவே, இனிமேல் விமர்சனங்களை முன்வைக்கும்போது, எதிரில் இருப்பவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்பதை மட்டும் பார்த்து மதிப்பிடாமல், அவர்கள் முன்வைக்கும் கொள்கை என்ன, கோட்பாடு என்ன, ஆட்சி முறை என்ன, சமூகத்திற்கான பார்வை என்ன என்பதை ஆராய்ந்து விமர்சியுங்கள்.
இந்த குறைந்தபட்ச நேர்மை மட்டுமே உங்கள் விமர்சனங்களுக்கான மதிப்பினை முடிவு செய்யும்.
எனக்கு புரிகிறது பிரசாந்த் !
தோல்வியின் ருசி அவ்வளவு எளிதானதல்ல.
அந்த ருசியைப் பல ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த என் அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வெற்றியும் எப்போதும் பெருமிதப்படுவதற்கான ஒன்றல்ல என்பதை, உங்களுக்குக் கிடைத்த இந்த அனுபவம் புரியவைத்து இருக்கும்.
நாங்கள் எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொள்வதை தான் உங்களுக்கும் சொல்கிறோம்.
" தோற்கலாம் . ஆனால் போராடுவதை நிறுத்தி விடக்கூடாது போராடுங்கள் ! .
ஏனெனில் சளைக்காமல் போராடுவதே உண்மையான வெற்றி! "
மணி செந்தில்.
@itisprashanth